ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியில் ‘புஷ்பா 2’ படம் பற்றிதான் நெகட்டிவ் ஆக குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருதுகின்றனர்.
சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாரீசன்’. இதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை விளம்பரப்படுத்த ஃபகத் பாசில் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் அவர் பெரிய படம் என்று குறிப்பிட்டு பேசியது ‘புஷ்பா 2’ படத்தைத் தான் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபகத் பாசில் பேட்டியில், “கடந்த ஒரு வருடமாக நான் ஒரு பெரிய படத்தில் நடித்து தோல்வியடைந்தேன். ஆகையால் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டை மீறும்போது, அதை விட்டுவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அவர் பேசியிருப்பது ‘புஷ்பா 2’ படத்தைத் தான் என பலரும் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், அப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபகத் பாசில்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா 2’. இப்படம் உலகளவில் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனை புரிந்தது. அப்படத்தைப் பற்றி ஃபகத் பாசில் பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.