சென்னை: இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம், அரசு ஊழியர் மற்றும் தொழிலாளர் நலனில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக பழைய ஓய்வூதிய திட்ட இயக்ககத்தின் தேசிய தலைவர் டாக்டர் மஞ்சித்சிங் பட்டேல் கடுமையாக விமர்சித்தார்.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவை திரும்பப் பெறுவது, பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
இப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான தேசிய இயக்ககத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் மஞ்சித்சிங் பட்டேல் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “இந்தியாவில் கல்வி, பொருளாதாரம், என அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், தொழிலாளர் நலனிலும், அரசு ஊழியர் பாதுகாப்பிலும் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தராத ஒரே மாநிலம் தமிழகம்தான்.
அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் தராதது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசு ஊழியர்களுக்கு இதர மாநிலங்களைப் போன்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்த கட்டபோராட்டம் குறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரடெரிக் எங்கெல்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதம் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து, அக்டோபரில் மறியல் போராட்டம் நடைபெறும். நிறைவாக, நவம்பர் 15-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் திரட்டி மிகப் பெரிய பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் ஒரே ஒரு அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்திவிடலாம். ஓய்வூதியம் தொடர்பாக குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை ஆகும். அதை நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. எனவே, இனியும் காலம்தாழ்த்தாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்” என்றார்.