“கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவு மலரட்டும்! கனவுகள் தான் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே செயல்களாக பரிணமிக்கின்றன” என்று கூறி குழந்தைகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நாட்டின் முன்னேற்றம் பற்றி கனவு காண வைத்தவர் நம் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
2002-ம் ஆண்டில் இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் பதவி வகித்தபோது, பதவி காலத்திற்கு பின்னர் அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார்.
கடந்த 27.07.2015 அன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் உயிரிழந்தார். பின்னர் கலாமின் உடல் அவர் பிறந்த ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு தேசிய நினைவிடம் கட்டப்பட்டது.
மாணவர்களையெல்லாம் கனவு காணுங்கள் என இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்த கனவு நாயகன் அப்துல் கலாம் தான் பணி ஓய்வு பெற்றதும், தனது சொந்த ஊரான ராமேசுவரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என தனது அக்னி சிறகுகள் சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவரது ஆவலுக்கேற்ப அவர் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் அவர் பெயராலேயே அரசு ஒரு கல்லூரியை உருவாக்க தமிழக சட்டப்பேரவையின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு 2019-20 கல்வி ஆண்டில் இந்த கல்லூரி ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்டது.
கல்லூரி துவங்கி 5 ஆண்டுகளாக சொந்த கட்டிடம் இல்லாமலேயே கல்லூரி இயங்கி வந்த நிலையில், ராமேசுவரத்தில் 8 ஏக்கர் நிலம் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டு 12 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் 3 தளங்களுடன் கல்லூரிக்கான புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கல்லூரி தொடங்கிய போது, பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் ஆகிய 5 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்லூரியில் ஆய்வகம் இல்லாததால் அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படாத நிலையில், நடப்பாண்டில் பிஎஸ்சி கணிதம் பாடமும் போதிய மாணவர் சேர்க்கை இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவரும் கிடையாது.
இந்தக் கல்லூரியில் கலாம் பயின்ற வானுர்தியியல், விண்வெளி அறிவியல் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு பல்நோக்கு கல்லூரி வளாகமாக கட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என கல்லூரி துவங்கப்பட்ட போது தமிழக அரசு அறிவித்தது. அவற்றை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.