மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஆறாம் கட்டத்தின் முதல் படமாக வெளியாகியுள்ளது ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’. ஃபென்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்களின் காப்புரிமை பல வருடங்களாக 20த் சென்சுரி நிறுவனத்திடம் இருந்ததால் அவற்றை மார்வெல் சினிமாடிக் உலகத்துக்குள் கொண்டு வருவதற்கு தாமதமானது. தற்போது அந்த நிறுவனம் டிஸ்னி வசம் வந்தபிறகே தற்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது.
எர்த் 828-ல் ஃபென்டாஸ்டிக் ஃபோர் சூப்பர்ஹீரோக்கள் உதயமாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. ரப்பர் போல உடலை நீட்டும் ரீட் ரிச்சர்ட்ஸ், காற்றை வசப்படுத்தி கண்ணுக்கு தெரியாமல் மறையும் சூ ஸ்டார்ம், பாறை போன்ற உடல் அமைப்பைக் கொண்ட பென், நெருப்பாக மாறும் ஜானி. இவர்கள்தான் ஃபென்டாஸ்டிக் ஃபோர். இதில் ரீட் ரிச்சர்ட்ஸும், சூ ஸ்டார்மும் தங்கள் குழந்தையை வரவேற்க தயாராக இருக்கின்றனர். இதனை கொண்டாட எத்தனிக்கும் தருணத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் உலோகம் போன்ற உடலைக் கொண்ட ஒரு பெண், கேலக்டஸ் என்ற ஒருவன் பூமியை நோக்கி வரப் போவதாகவும், ஏற்கெனவே பல கிரகங்களை விழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் பூமியையும் விரைவில் உட்கொள்வான் என்றும் எச்சரித்து செல்கிறார். உலக நாடுகள் அனைத்தும் இதுகுறித்து கையை பிசைந்து கொண்டிருக்கும் வேளையில் கேல்க்டஸ் பூமிக்கு வருவதற்கு முன்னால் அவனைத் தேடி எக்ஸல்சியர் என்ற விண்கலத்தில் ஃபென்டாஸ்டிக் ஃபோர் குழு செல்கிறது.
அங்கு பிரம்மாண்ட உருவத்துடன் இருக்கும் கேலக்டஸ், சூ ஸ்டார்ம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு விசேஷ சக்திகள் இருப்பதால் அந்த குழந்தையை தன்னிடம் கொடுத்து விட்டால் பூமியை எதுவும் செய்யாமல் விட்டுவிடுவதாக அவர்களிடம் சொல்கிறான். ஆனால் தன் குழந்தையை எக்காரணம் கொண்டும் தரமுடியாது என்று சூ மறுத்து விடுகிறார். அங்கிருந்து சண்டையிட்டு தப்பித்து வரும் நால்வரும் பூமியில் மக்கள் முன் நடந்ததை சொல்கின்றனர். இதனால் மக்களின் ஒட்டுமொத்த கோபமும் அவர்கள் மீது திரும்புகிறது. கேலக்டஸிடம் குழந்தையை கொடுத்து பூமியை காப்பாற்றினார்களா? அல்லது கேலக்டஸை தடுக்க மாற்று வழியை அவர்கள் கண்டுபிடித்தார்களா? என்பதே ‘தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் கதை.
இப்போது உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் மார்வெல் கதாபாத்திரங்கள் பெரிய திரையில் பிரபலமாவதற்கு முன்னாலேயே ஃபென்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. காரணம் 2005ல் வெளியான ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படம் பெற்ற வரவேற்பு. தற்போது பழைய அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களில் பலவும் முடிவுக்கு வந்துவிட்டதால் புதிய அவெஞ்சர்களுக்கான முன்னெடுப்பை ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ கதாபாத்திரங்களின் மூலம் கொண்டு செல்ல மார்வெல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் ஓரளவு வெற்றிபெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
2005-ல் வெளியான படத்தில் பிரதான கதாபாத்திரங்கள் எப்படி சூப்பர்ஹீரோக்களாக மாறினார்கள் என்பது ஓரளவு விலாவரியாக காட்டப்பட்டுவிட்டதாலும் மார்வெல் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அந்த கதாபாத்திரங்கள் பரிச்சயமானவைதான் என்பதாலும் அவர்களின் பின்னணியை மான்டேஜிலேயே சொல்லிவிட்டது ஆறுதல். படத்தில் நிறைய அறிவியல் மிக ஆழமாக பேசப்படுகிறது. சூப்பர்ஹீரோ படத்துக்குண்டான சாகசக் காட்சிகளை குறைத்து விட்டு அதிகம் அறிவியல் பேசியிருப்பது பொதுவான ரசிகர்கள் மத்தியில் எடுபடுமா என்பது சந்தேகமே. சூப்பர்ஹீரோ படத்துக்கு மக்கள் வருவதே அந்த சாகசக் காட்சிகளுக்காகத் தானே?
குறிப்பாக நான்கு சூப்பர்ஹீரோக்களின் திறன்கள் தனித்தனியாக பெரியளவில் அலசப்படவில்லை. குறிப்பான திங் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஹல்க் போன்ற ஆகிருதியைக் கொண்ட ஒன்று. ஆனால் இப்படத்தில் அந்த கதாபாத்திரத்தின் திறன் எங்கும் வெளிப்படவில்லை. சூ ஸ்டார்ம், டார்ச் ஆகிய கேரக்டர்களின் சூப்பர்பவர் மட்டுமே படத்தில் நன்றாக காட்டப்பட்டிருக்கிறது. மெயின் ஹீரோவான ரீட் ரிச்சர்ட்ஸ் ஒரு சூப்பர்ஹீரோ என்பதைத் தாண்டி ஒரு அறிவியலாளராக மட்டுமே காட்டப்படுகிறார்.
இதைத் தாண்டி ‘காமிக் அக்யூரேட்’ என்ற பதத்துக்கு நியாயம் செய்யும் வகையில் மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு விருந்து. பறக்கும் கார், எக்சல்சியர் விண்கலம், திங் கதாபாத்திரத்தின் தோற்றம் போன்றவை காமிக்ஸில் இருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. நீள நீளமான வசனங்களைத் தாண்டி படம் பெரியளவில் எங்கும் சலிப்பு தட்டாதது ஆறுதல். நான்கு சூப்பர்ஹீரோக்களுக்கும் இடையிலான பிணைப்பும் நன்றாக காட்டப்பட்டிருக்கிறது. கேலக்டஸிடமிருந்து தப்பித்து வரும் காட்சி, கடைசியாக கேலக்டஸ் பூமிக்கு வரும் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால் இது போன்ற மேலும் சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
படத்தில் இரண்டு போஸ்ட் கிரெடிட் காட்சிகள் உள்ளன. அதில் முதலில் வரும் காட்சியில் தியேட்டரின் கூரை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரங்கமே அதிர்கிறது. மார்வெல் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பலனாக அந்த காட்சி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு அவ்வப்போது சொதப்பினாலும் இடையிடையே சில நல்ல படங்கள் / தொடர்களின் மூலம் மீண்டும் தன்னை நீருபித்துக் கொண்டிருக்கிறது மார்வெல். அந்த வகையில் சில குறைகள் இருந்தாலும் புதிய அவெஞ்சர்களுக்கான மார்வெலின் இந்த முன்னெடுப்பு ரசிக்கும்படியே உள்ளது.