லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் போராடி தோற்றது இந்திய அணி, இது அணி வீரர்கள், ரசிகர்களுக்கு மனமுடைப்பை உண்டாக்கியது என்றாலும் கூட இப்போது மான்செஸ்டரில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு, ஷுப்மன் கில் கேப்டன்சி, அணித்தேர்வு, களவியூகம், உடல்மொழி என்று அனைத்துமே பெரும் சிக்கலானது எப்படி? திடீரென ஏற்படும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
அதுவும் குறிப்பாக கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை வெற்றி வாய்ப்புக்கருகில் கொண்டு வந்த ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை 69 ஓவர்கள் வரை கொண்டு வராமல் அவரை அவமானப்படுத்த கில்லிற்கோ, மோர்னி மோர்கெலுக்கோ, கம்பீருக்கோ எந்த உரிமையும் கிடையாது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஆசியாவுக்கு வெளியே 500 ரன்களை எதிரணிக்குக்கொடுத்ததே கிடையாது என்பதுதான் கிரிக் இன்போவின் ஆதாரபூர்வ புள்ளி விவரமாகும். இந்த 10 ஆண்டுகள் காலக்கட்டத்திற்கு முன்பு 16 முறை ஆசியாவுக்கு வெளியே ஒரு இன்னிங்சில் 500 ரன்களைக் கொடுத்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஷமி, பும்ரா, உமேஷ், இஷாந்த், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சு நல்ல உடல்தகுதியுடனும் நல்ல ஃபார்மிலும் இருந்தது, இன்று இந்த இந்திய அணி மாற்றத்தில் இருக்கிறது, அதுவும் பும்ரா, சிராஜ் போன்ற பவுலர்களின் கால்கள் களைப்படைந்த கால்களாகிவிட்டன. அன்ஷுல் காம்போஜ் ஆச்சா போச்சா என்றனர் கடைசியில் கர்நாடகா மிதவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ரேஞ்ச்தான் இவர் என்று தெரிந்து விட்டது. வினய் குமாரை 2012 ஆஸ்திரேலிய தொடரில் அணியில் சேர்க்க நேரிட்டு 13 ஓவர்களில் 73 ரன்களை பெர்த் டெஸ்ட்டில் கொடுத்து சாத்து வாங்கினார்.
அதே போல் அன்ஷுல் காம்போஜ், ‘விக்கெட் எடுக்கப் போனேன்.. நான் செம சாத்து வாங்கி வந்தேன்’ என்று காமெடி பீஸ் ஆகிவிட்டார். அதே போல் ஷர்துல் தாக்கூர் அவர் என்ன பந்து வீசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை, பயிற்சியாளர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. 2-வது நாளில் அன்ஷுல் காம்போஜ் வேகமும் 128 கிமீ சாரசரியைத் தாண்டவில்லை. 3-ம் நாளில் இன்னும் சரிவடைந்து மணிக்கு 125 கிமீ வேகம்தான் வீசினார். எல்லா ஹைப்பும் காலியானது.
வேகப்பந்து வீச்சு ஒன்றுமேயில்லை எனும்போது 6வது ஸ்பெஷலிஸ்ட் பவுலர் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் 69 ஓவர்கள் வரை அவரைக் கொண்டு வராமலேயே அராஜகம் செய்தார் ஷுப்மன் கில், பிறகு ஏன் கொண்டு வந்தார் என்றால் விரைவில் 80 ஒவர்களை முடித்து புதிய பந்தை எடுக்க வேண்டும் என்பதனால்தானே தவிர அவரை ஒரு விக்கெட் வீழ்த்தும் பவுலராகக் கருதவில்லை என்றே பொருள். அஸ்வினுக்குப் பிறகு ஸ்ட்ரைக் பவுலராக உள்ளே வந்த சுந்தர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
கொண்டு வந்ததும் என்ன ஆனது? நன்கு செட்டில் ஆன ஆலி போப் விக்கெட்டையும், அபாய அதிரடி வீரர் ஹாரி புரூக்கையும் வீழ்த்தினார் சுந்தார். ஒருவேளை முன்னமேயே கொண்டு வந்திருந்தால் அவர் ஜோ ரூட்டையும் காலி செய்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து ஆல் அவுட் ஆகியிருக்கலாம். இந்த வாய்ப்புகளைக் கோட்டை விட்ட கில்லின் கேப்டன்சி மிக மிக மோசமானது என்றால் அது மிகையானதல்ல.
இந்த முடிவில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என்றும் கில்லின் முடிவுதான் சுந்தரை தாமதமாகக் கொண்டு வந்தது என்றும் மோர்னி மோர்கெல் கைகழுவுகிறார். சரி! மேலே என்ன செய்து கொண்டிருந்தனர், ஒரு நபரை விட்டு மெசேஜ் கொடுக்க வேண்டியதுதானே?
சஞ்சய் மஞ்சுரேக்கர் கில்தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை, “கில் மட்டும் தான் சுந்தரை தாமதமாகக் கொண்டு வர காரணம், ஏனெனில் பும்ரா, ராகுல், அல்லது கம்பீர் இப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. 69 ஓவர்கள் வரை அவரைக் கொண்டு வராமல் இருப்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை, என்ன உத்தி இது? கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை 2வது இன்னிங்ஸில் கைப்பற்றி தன்னை நிரூபித்துள்ளார் சுந்தர். பென் ஸ்டோக்ஸ் ஸ்பின் பந்தை சரியாக ஆடவில்லை. அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும் அவருக்குக் கொடுக்க மாட்டேன் என்று நினைப்பது என்ன மனநிலை என்று புரியவில்லை.
ரவி சாஸ்திரியும் இந்த மூவ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். 1-1 என்று தொடரை சமன் செய்த நிலையில் காயங்கள் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், அணித்தேர்வில் திடீரென சாய் சுதர்சனைக் கொண்டு வருவது, குல்தீப் யாதவ்வை அணியில் தேர்வு செய்வது பற்றி எந்த ஒரு விவாதமும் செய்யாமல் இருப்பது, சுந்தரை மிக மிக தாமதமாகக் கொண்டு வரும் போது பெவிலியனில் வாய் மூடி மவுனிகளாய் கம்பீர் உள்ளிட்டோர் அமர்ந்திருப்பது, அன்ஷுல் காம்போஜை அணியில் தேர்வு செய்தது, போதாக்குறைக்கு அவருக்கு புதிய பந்தைக் கொடுத்தது, அவர் 125 கிமீ வேகமே வீசும் போது மோர்னி மோர்கெல் வாய மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது என்று ஒரே குழப்பம்… என்ன நடக்கிறது? யாராவது தலையிட்டு விஷயங்களை வெளிப்படையாக்காவிட்டால், கம்பீரின் பயிற்சிக் காலத்தில் இந்திய டெஸ்ட் அணி கடும் வீழ்ச்சியையே சந்திக்கும்.
ஏற்கெனவெ நியூஸிலாந்திடம் இந்திய மண்ணிலேயே கிளீன் ஸ்வீப், ஆஸ்திரேலியாவில் உதை, இப்போது இங்கிலாந்திலும் உதை, ஆனால் எது கேட்டாலும் திமிராகப் பதில் சொல்வது, விட்டேத்தியாகப் பார்ப்பது போன்ற இந்த அணி நிர்வாகத்தை முற்றிலும் மாற்ற வேண்டும், இல்லையெனில் இந்திய கிரிக்கெட் விரைவில் சரியும் நிலைதான் ஏற்படும்.