சென்னை: தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை அவசியமில்லை, வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெற்று, சுருக்க முறை திருத்தம் மேற்கொள்வது வழக்கமான நடைமுறையாகும். தற்போது, எந்தவித ஆலோசனையும் பெறாமல் வழக்கமான நடைமுறையை மாற்றி, சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை அறிவித்திருப்பது சுதந்திரமான, நியாயமான, பக்கச் சார்பற்ற தேர்தல் நடைமுறைகளின் அடிப்படைகளை தகர்க்கும் செயலாகும்.
ஒன்றிய அரசின் அதிகாரத்தில் உள்ள பாஜகவும், அதன் கூட்டாளிகளும் மக்கள் செல்வாக்கை இழந்து வருவதன் காரணமாக, தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் தேர்வு செய்யும் குழு குறித்து, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வின் உத்தரவை நிராகரித்து, தேர்தல் ஆணையர், ஆணையர்கள் தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் என சட்டத் திருத்தம் செய்து, ஆளும் கட்சியின் தலையீட்டுக்கு வழி அமைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, வரும் தேர்தலில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை அமைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை தங்களுக்கு சாதகமாக தயாரித்துக் கொள்ளும் குறுக்கு வழி செயலில் இந்திய தேர்தல் ஆணையம் இறக்கி விடப்பட்டுள்ளது. இதற்காகவே, பாஜக ஒன்றிய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் தலைமை ஆணையர், ஆணையர்கள் தேர்வுக் குழுவில், செயற்கையான பெரும்பான்மை உருவாக்கிக் கொண்டுள்ளது.
எல்லைப் பகுதி மாநிலங்களிலும், பிஹாரிலும் தொடங்கிய நடவடிக்கையை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது மக்கள் நாடாளுமன்ற ஆட்சி முறையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை தகர்த்து, எதிர்மறை விளைவை உருவாக்கி, ஜனநாயக முறைக்கு பேராபத்தாக அமையும் என்பதை ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை அவசியமில்லை, வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி, கருத்துக்களை கேட்டறிந்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.