பாட்னா: பிஹாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மாதத்துக்கு ரூ.9,000 அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதனால் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியமும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “‘பிஹார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின்’ கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 க்கு பதிலாக ரூ.15,000 வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதலாக, ‘பிஹார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின்’ கீழ் ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர் இறந்தால், அவரின் மனைவிக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ரூ.3,000 க்கு பதிலாக ரூ.10,000 மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்து சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை செலுத்துகின்றனர். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வு பெற்ற பிறகு கண்ணியத்துடன் வாழவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை பெரிய அளவில் உயர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் நிதிஷ்குமார்.