தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சினை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. கம்போடிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது தாய்லாந்து. கம்போடியா ராக்கெட், பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாலேயே இந்த பதில் நடவடிக்கை என்று தாய்லாந்து விளக்கமும் அளித்துள்ளது.
தாய்லாந்து தரப்பில் ஒரு சிறுவன் உள்பட 11 பொதுமக்களும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா இழப்பு குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் தகவல் இல்லை. இரண்டும் சிறிய நாடுகள், இரண்டுமே சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. ஆனால், சமீப காலமாக இரண்டும் போரை நோக்கி போகுமளவுக்கு என்ன நடந்தது என்று அலசுவோம்.
மோதலின் பின்னணி என்ன?: தாய்லாந்து – கம்போடியா இடையேயான பிரச்சினை நூற்றாண்டு பழமையானது. 1953 வரை கம்போடியா நாடு பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. பிரான்ஸ் தான் முதன்முதலில் கம்போடியா – தாய்லாந்து இடையேயான எல்லையை வரையறுத்தது. எல்லையை வரையறுத்ததில் 817 கிலோ மீட்டர் அளவிலான நிலப்பரப்பின் மீதான உரிமைதான் இப்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தப் பகுதி யாருடையது என்பதில் நீடிக்கும் சிக்கல் தீர்வில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
புதிய மோதலுக்கான பிரச்சினை மே மாதம் தொடங்கியது. மே மாதம் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிலிருந்தே கம்போடியாவும், தாய்லாந்தும் பழிக்குப்பழி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. எல்லையில் கெடுபிடிகள், கம்போடிய காய்கறி, பழங்களுக்கு தாய்லாந்தில் தடை, தாய்லாந்து படங்களுக்கும், இணைய சேவைக்கும் கம்போடியாவில் தடை என போட்டாபோட்டிகள் நீண்டன.
ஆனால், கடந்த புதன்கிழமை இது ராணுவ மோதலாக வெடித்தது. அன்றைய தினம் வழக்கமான ரோந்தில் இருந்த தாய்லாந்து ராணுவ வீரர்கள் ஐந்து பேர் கண்ணிவெடித் தாக்குதலில் காயமடைந்தனர். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தாய்லாந்து அதிகாரிகள், ‘இந்த கண்ணிவெடிகள் புதிதாக வைக்கப்பட்டவை’ என்று குற்றஞ்சாட்டினர். உடனடியாக கம்போடியாவுக்கான தாய்லாந்து தூதரை திரும்பப் பெற்றதோடு, கம்போடிய தூதரையும் திருப்பி அனுப்பினர். கம்போடியாவும் அதையே செய்தது. கூடவே, புதிதாக கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.
அடுத்து என்ன? – கம்போடியாவில் ஒற்றைக் கட்சி ஆட்சி நடக்கிறது. அதன் தலைவராக ஹுன் சென் 40 ஆண்டுகளாக இருந்தார். கடந்த 2023-ல் அவர் அவரது மகன் ஹுன் மானெட்டுக்கு அதிகாரத்தை ஒப்படைத்தார். ஆனாலும் ஹுன் மானெட் தந்தையின் புகழ் வெளிச்சத்தில் தான் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் பரவலாக இருக்கிறது. இந்நிலையில், எல்லைப் பிரச்சினை, நாட்டுப்பற்று ஆகியனவற்றை தூக்கிப் பிடிப்பதன் மூலம் மகனுக்கான அரசியல் முக்கியத்துவத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையில் ஹுன் சென் இதையெல்லாம் ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னொருபுறம், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தாய்லாந்தும், கம்போடியாவும் அமெரிக்காவின் 36% இறக்குமதி வரிக்கு ஆளாக இருக்கின்றன. அதன் மீதான விவாதங்கள், அரசியல் சர்ச்சைகளை திசை திருப்பவே இந்த புதிய மோதல் என்றும் கூறப்படுகிறது.
தாய்லாந்துக்கு ஏற்கெனவே உள்நாட்டு அரசியல் சிக்கல் இருக்கின்றது. தாய்லாந்து பிரதமராக இருந்த பீட்டோங்டார்ன் ஷினவத்ரா மீது கட்சிக்குள்ளேயே அதிருப்தி. எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கட்சியினரின் புகார்.

முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகளான இவர், கம்போடியா முன்னாள் அதிபர் ஹுன் சென்னுடன் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்தது, அவர் மீதான வெறுப்புக்கு மேலும் தூபம் போட்டது. அந்த கசிந்த உரையாடலில், ஹுன் சென்னை அவர் மாமா என்று அழைப்பதும், கூடவே எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்ததும் தாய்லாந்து அரசியலில் புயலைக் கிளப்பியது.
மேலும், தாய்லாந்து ராணுவத் தலைமை பற்றியும் அவர் விமர்சித்திருந்தது அம்பலமானது. தாய்லாந்து அரசியல் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவே அந்நாட்டு ராணுவ இருக்கும் நிலையில், அவரின் பேச்சு ராணுவத்தினரையும் ஆவேசமடைய வைத்துள்ளது. பழைய குடும்ப நட்புக்காக நாட்டின் நலனை அடகுவைத்துவிட்டார் என்ற விமர்சனங்கள் வலுக்க, பீடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய்தது. அதனால் அவரது கட்சி பியூ தாய் தற்போது சிக்கலில் உள்ளது. இப்போது ராணுவம் சொல்வதற்கு கீழ்ப்படியும் நிலையில் தாய்லாந்து அரசு உள்ளது.
தீர்வு என்ன? – சர்ச்சைகள் நீளும் சூழலில் கம்போடியா ஏற்கெனவே சர்வதேச நீதிமன்றத்தில், தாய்லந்துடனான எல்லைப் பிரச்சினையை தீர்த்துவைக்கக் கோரியுள்ளது. ஆனால், தாய்லாந்து சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதற்கில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டதால், இதனால் பலனொன்றும் இருக்கப் போவதில்லை.
தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் கூட்டமைப்பின் தற்போதைய தலைவரான மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், எல்லை விவகாரத்தில் தாய்லாந்து – கம்போடியா அமைதி காக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதைத் தாண்டி எதுவும் ஆசியான் செய்துவிடாது. அதன் கொள்கைகள் அப்படி!
இந்நிலையில், இப்போதைய ஒரே வாய்ப்பு சீனாதான். சீனாவுக்கு மட்டுமே கம்போடியா, தாய்லாந்து நாடுகள் மீது சமமான செல்வாக்கு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது உண்மையென்றாலும் கூட, சீனா வர்த்தக ரீதியாக கம்போடியாவுடன் அதிக நெருக்கம் பாராட்டும் நாடு. அதனால், ஏற்கெனவே தாய்லாந்து, கம்போடியாவில் சீன ஆதிக்கம் மேலோங்கியிருப்பதாக கருதும் தாய்லாந்து அரசியல்வாதிகள் சீன தலையீட்டை விரும்பவில்லை.
தாய்லாந்து காபந்து பிரதமர் ஃபும்தாம் வெச்சாயாச்சி, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் முடிவுக்குவந்தால் தான் பேச்சுவார்த்தையை தொடங்க முடியும் என்று பிடிவாதம் காட்டுகிறார். ஆனால், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டு தாய்லாந்தின் அத்துமீறல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்நிலையில், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையைப் பேண கம்போடியா – தாய்லாந்து எல்லைப் பிரச்சினை ஒரு முழு வீச்சு போராக உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழத் தொடங்கியுள்ளன.