கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாகிவிட்டது புதுக்கோட்டை மாநகர திமுக-வின் நிலை. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் திடீரென காலமானதை அடுத்து மாநகர் செயலாளர் பதவியை பிடிக்க பலரும் முட்டி மோதினார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், ராஜேஷ் என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எம்.அப்துல்லா (எக்ஸ் எம்பி) ஆகியோரின் ரூட்டைப் பிடித்து மாநகர் செயலாளராக வந்து உட்கார்ந்தார். ஆனால், அமைச்சர் நேரு மற்றும் புதுகை வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனின் விசுவாசிகள் ராஜேஷை நிம்மதியாக உட்கார விடவில்லை. அவரை மாற்றியே தீரவேண்டும் என அறிவாலயம் வரைக்கும் போய் சத்தியாகிரகம் செய்தார்கள்.
தலைமையும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் கேட்பதாக இல்லை. இதனால், புதுக்கோட்டை மாநகர திமுக-வை மூன்றாக பிரித்துவிடலாம் என யோசனை சொன்னார் அமைச்சர் நேரு. ஆனால், அதை ஏற்காத ஸ்டாலின், புதுக்கோட்டை மாநகர திமுக-வை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து மாநகர் தெற்கிற்கு பழையபடி ராஜேஷையே செயலாளராக அறிவித்துவிட்டு, வடக்கிற்கு துணை மேயரான லியாகத் அலியை செயலாளராக நியமித்தார்.
“எங்களைக் கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை மாநகரச் செயலாளராக ராஜேஷ் தொடரக் கூடாது” என கொடிபிடித்து நின்ற திமுக வட்டச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் மாநகரத்தை பிரித்து ராஜேஷின் அதிகாரத்தைக் குறைத்ததால் சற்றே சாந்தமான நிலையில், இன்னொரு கோஷ்டி புதுப் பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறது. மாநகர் வடக்கு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள லியாகத் அலி தற்போது புதுகை வடக்கு மாவட்ட பொருளாளர் பதவியிலும் துணை மேயராகவும் இருக்கிறார். இதை வைத்துத்தான் இப்போது புதுப் பிரச்சினை வெடித்திருக்கிறது.
இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் வில்லங்கத்தைக் கிளப்பிய வட்டச் செயலாளர்கள் சிலர், “கட்சியில் எந்தப் பதவியும் இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கையில் ஒருவருக்கே இத்தனை பொறுப்புகளை வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதற்குப் பதிலாக மற்றவர்களுக்கும் பொறுப்புகளை பகிர்ந்து வழங்கலாமே” என லியாகத் அலிக்கு எதிராக பிரளயத்தைக் கிளப்பினர்.
இதையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் கூட்டம் நடந்த அறையின் கதவு சாத்தப்பட்டது. சற்று நேரத்தில் அங்கு வந்த முன்னாள் எம்எல்ஏ-வான கவிதைப்பித்தன் இரு தரப்பிடமும் பேசி அமைதிப் படுத்தினார். இதன் பிறகு கூட்டம் முடிந்து கலைந்து சென்றவர்கள், “எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஓரணியாகத்தான் இருக்கிறோம்” என்று மீடியாக்களிடம் சொல்லிவிட்டுச் சென்றனர்.
ஆக, புதுக்கோட்டை மாநகர் திமுக-வில் ராஜேஷை மையம் கொண்டிருந்த பிரச்சினையானது இப்போது லியாகத் அலியை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. அவரிடம் உள்ள பொருளாளர் பதவியை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்கும் வரை இந்தப் பிரச்சினை ஓயாது என்கிறார்கள். ஏற்கெனவே, அன்பில் மகேஸின் ஆதரவில் மாநகரச் செயலாளராக வந்த ராஜேஷுக்கு எதிராக செல்லபாண்டியன் மற்றும் அமைச்சர் நேருவின் விசுவாசிகள் நெருக்கடி கொடுத்தார்கள். இப்போது, செல்லபாண்டியன் சிபாரிசில் லியாகத் அலி வடக்கு மாநகர் செயலாளர் பொறுப்புக்கு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டு எதிர்கோஷ்டியினர் லியாகத் அலிக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரத்தை திமுக தலைமை தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாநகர திமுக-வினர் தாங்கள் ‘யார் அணியில்’ என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறார்கள்!