மான்செஸ்டர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்களில் இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளார் இங்கிலாந்தின் ஜோ ரூட். இந்திய அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரூட் முறியடித்தார்.
அப்போது போட்டியின் வர்ணனையாளராக ரிக்கி பாண்டிங் இருந்தார். அது குறித்து அவர் கூறியது: “வாழ்த்துகள் ஜோ ரூட். இதுவொரு அற்புதம். இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் இரண்டாவது இடத்தில் நீங்கள் இருக்கிறீகள். இந்தப் போட்டியை காண ஓல்டு டிராஃபோர்டு மைதானத்துக்கு வந்துள்ள எல்லோரும் உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தருகின்றனர்.
இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அற்புத தருணம். இன்னும் ஓர் இடம் தான் முன்னேற வேண்டும். அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தை எட்ட சுமார் 2500 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக ரூட்டின் ஆட்டத்தை பார்க்கும்போது அது ஏன் முடியாது என்ற எண்ணம் வருகிறது” என்றார்.
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 120 ரன்களை எட்டிய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கின் (13,378) சாதனையை முறிடியத்தார். ஜோ ரூட் 13,409 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மான்செஸ்டர் டெஸ்ட்டில் 150 ரன்கள் எடுத்து ரூட் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியை காட்டிலும் 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. கிராவ்லி (84), பென் டக்கெட் (94), ஆலி போப் (71) மற்றும் ஜோ ரூட் (150) என இங்கிலாந்து அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் அந்த அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த தவறி உள்ளனர். அதே நேரத்தில் கேப்டன் ஷுப்மன் கில் பவுலர்களை ரொட்டேட் செய்யும் விதம் குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்துள்ளனர்.