மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தமிழ் தயாளன் இயக்கியுள்ள படம், ‘கெவி’. இதில் ஷீலா ராஜ்குமார், ஆதவன், ஜீவா சுப்ரமணியம் என பலர் நடித்துள்ளனர். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் கடந்த 18-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி, கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள திரையரங்கில் மலைவாழ் மக்களுக்காக நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. ஆனைகட்டி, கண்டிவழி, ஆலமரமேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கானோர் இந்தப் படத்தைக் கண்டு ரசித்தனர். அவர்களுடன் திரைப்பட குழுவினரான நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர், நடிகர்கள் பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்த மலைவாழ் மக்கள், எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிரமங்களைப் பார்ப்பது போல் இருப்ப தாகப் பட குழுவினரைப் பாராட்டினர்.
இதுகுறித்து பேசிய படக்குழுவினர், ‘‘இந்தப் படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை எடுத்து கூறுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படைத் தேவை என்பது கண்டிப்பாகச் சேர வேண்டும். அதற்காகத்தான் எங்களுக்குத் தெரிந்த வழியில் அதைச் சொல்லி இருக்கிறோம்”” என்றனர்.