புதுக்கோட்டை: திமுக அரசு 4 ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியின்போது கரோனா பரவல், வறட்சி, கஜா புயல் பாதிப்பு இருந்தபோதும் விலைவாசி கட்டுக்குள் இருந்தது.
ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து விட்டது. மின் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. மயிலாடுதுறையில் நேர்மையாகப் பணிபுரிந்த டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் டிஎஸ்பி மன உளைச்சலால் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளார். காவல் துறையில் பணிபுரிவோருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது, பொதுமக்களின் நிலை என்ன? கடந்த 4 ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தல் வரப்போகிறது என்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து, திருமயம், விராலிமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, புதுக்கோட்டையில் விவசாயிகள், வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
உருட்டுகளும், திருட்டுகளும்.. புதுக்கோட்டையில் ‘உருட்டுகளும், திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சாரப் பயணத்தை பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம், ரூ.100 காஸ் மானியம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம், படிப்படியாக மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை சக்கரமாக வைத்து சுழற்றச் செய்தும், ஸ்கிராட்ச் கார்டு வடிவிலும் புதிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.