மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.
மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தனர். ஆலி போப் 20, ஜோ ரூட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஆலி போப் 128 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில், சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு ஆலி போப், ஜோ ரூட் ஜோடி 144 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் 3 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.
இதன் பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இதனால் இங்கிலாந்து அணி 87-வது ஓவரில் 358 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 178 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 38-வது சதத்தை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இலங்கையின் குமார் சங்கக்கராவின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்.
மேலும் இந்தியாவுக்கு எதிராக அவர், அடித்த 12-வது சதம் இதுவாகும். இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியிருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் (11 சதங்கள்) சாதனையை முறியடித்தார். தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்திருந்தது. ஜோ ரூட் 120, பென் ஸ்டோக்ஸ் 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
தேநீர் இடைவேளைக்கு பிறகு அரை சதம் கடந்தார் ஸ்டோக்ஸ். அவர், 116 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த நிலையில் தசை பிடிப்பு காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அதையடுத்து ஜேமி ஸ்மித் களத்துக்கு வந்தார்.
மறுமுனையில் ஜோ ரூட் 150 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா சுழலில் மாற்று விக்கெட் கீப்பர் ஜுரேல் ஸ்டெம்பிங்க் செய்ய ஆட்டமிழந்தார். ஜேமி ஸ்மித் 9, கிறிஸ் வோக்ஸ் 4 ரன்களில் வெளியேறினர். அதன் பின்னர் ஸ்டோக்ஸ் மீண்டும் பேட் செய்ய வந்தார்.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்டோக்ஸ் 77, டாவ்சன் 21 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி இந்தப் போட்டியை டிரா செய்யும் வகையில் விளையாட வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
23 ரன்களில் தப்பித்த ஜோ ரூட்: இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 23 ரன்களில் இருந்த போது அதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். ஜோ ரூட் கல்லி திசையில் அடித்த பந்தை பீல்டர் பாய்ந்து இடைமறித்தார். அப்போது ஜடேஜா பந்தை எடுத்து விரைவாக நான்-ஸ்ரைடிக்கர் முனையை நோக்கி வீசினார். அவரது குறி தப்பிய நிலையில் அங்கு பந்தை பிடிக்க ரன் அவுட் செய்ய யாரும் இல்லாததால் ஜோ ரூட் தப்பித்தார். இந்த வாய்ப்பை அவர், சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
ரன் குவிப்பில் 2-வது இடம்: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 120 ரன்களை எட்டிய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கின் (13,378) சாதனையை முறிடியத்தார். ஜோ ரூட் 13,379 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.