கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறிய 2 தங்கும் விடுதிகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், 200 விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து, கொடைக்கானலில் ‘ஹோம் ஸ்டே’ என்ற பெயரில் வீடுகளை தங்கும் விடுதியாக சிலர் மாற்றியுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அனுமதியின்றியும், சட்ட விரோதமாக இயங்கும் விடுதிகளை அடையாளம் காண வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, காவல்துறை உட்பட அனைத்து துறைகள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மாலை கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் 2 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வட்டாட்சியர் பாபு தலைமையிலான அதிகாரிகள், போலீஸார் பாதுகாப்புடன் அந்த விடுதிகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதே போல், கொடைக்கானலில் அனுமதி பெறாமலும், முறையாக ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வரும் 200-க்கும் மேற்பட்ட விடுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த விடுதிகளுக்கு தற்போது நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருகிறது. விதிமீறி செயல்படும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.