திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா வின் ஏழாம் நாளான இன்று திருத்தேரின் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயில் கோயில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, ஆடிப்பூரம் உற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, நாள்தோறும் திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் வாகனங்களின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், உற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரின் மீது திரிபுர சுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், மாடவீதிகளின் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர், அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் புவியரசு தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.