சென்னை: வழக்கு தொடரும் கட்சிக்காரர்கள் தங்கள் மனைவியை விட தங்களது வழக்கறிஞர்களைத்தான் அதிகம் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை ஒருபோதும் வீணாக்கிவிடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் பணி ஓய்வு பெற்றதால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசுகையில், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடந்த 9 ஆண்டுகளில் 37 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்வில் சக உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் ஏற்புரையாற்றி பேசுகையில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 33 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய முழுத் திருப்தியுடன் விடைபெறுகிறேன். நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வருவார்கள், போவார்கள்.
ஆனால் உயர் நீதிமன்றம் என்பது நிரந்தரமான அமைப்பு. ஜனநாயகம் என்ற தேரில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இருசக்கரங்கள். நீதி பரிபாலனத்துக்கு இந்த இருவரும் முக்கியமானவர்கள்.
வழக்கறிஞர்கள் வழக்கு விவரங்களை முழுமையாகப் படித்துவிட்டு விசாரணைக்கு தயாராக வந்தால்தான் நீதிபதிகள் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியும். சில நேரங்களில் வழக்கு கட்டுகளை படிக்காமல் விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களை நானும் கடிந்து கொண்டதுண்டு.
வழக்கு தொடரும் கட்சிக்காரர்கள் தங்களது மனைவியை விட தனது வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களைத்தான் பெரிதாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கை ஒருபோதும் வீணாகிவிடக்கூடாது” என்றார். நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 55 ஆக குறைந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.