சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), வீர மாமுனிவர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), நற்றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), தூய தமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளர் பரிசுக்கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழ் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம், நகர நிர்வாக அலுவலக கட்டிடம் (முதல் தளம்), 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆர்சி நகர், சென்னை-600023’ என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அல்லது என்ற இணையதளம் வாயிலாகவோ ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 044-29520509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆய்வு மலருக்கு கட்டுரைகள்: வீரமாமுனிவர் பிறந்தநாளான நவம்பர் 8-ம் தேதி தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று வெளியிடப்பட உள்ள அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகளை கணினியில் தட்டச்சு செய்து agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு செப்டம்பர் 1-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
இதுதவிர மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கும் அனுப்ப வேண்டும். தங்கள் முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, ஒருபக்க அளவில் சுயவிவர குறிப்பு ஆகியவற்றையும் கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும்.
அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரை இதற்கு முன்பு வேறு எந்த இதழுக்கும் வழங்கப்படவில்லை என்ற உறுதிமொழியையும் தன்னொப்பமிட்டு (self attested) அனுப்ப வேண்டும். தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள், ‘தமிழ் அகராதியியல் நாள்’ சிறப்பு ஆய்வு மலரில் இடம்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.