மதுரை: விசாரணையின்போது தூத்துக்குடி உப்பளத் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் டிஎஸ்பி மற்றும் 3 காவலர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவரை நாட்டு வெடிகுண்டு வழக்கு விசாரணைக்காக 1999 செப். 17-ம் தேதி தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் போலீஸார் வின்சென்ட்டை தாக்கியுள்ளனர். இதில் வின்சென்ட் உயிரிழந்தார்.
வின்சென்ட்டை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக அவரது மனைவி கிருஷ்ணம்மாள், தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தூத்துக்குடி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
பின்னர் வின்செட் மரணம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், காவலர்கள் ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லத்துரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப். 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி தாண்டவன் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி), சோமசுந்தரம் (நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்வாளர்), பிச்சையா (நில அபகரிப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்), ஜெயசேகரன், வீரபாகு, ஜோசப்ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற காவலர்கள் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சுப்பையா, ஜெயசேகரன், வீரபாகு ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு விசாரணை முடியும் வரை ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து, ஜாமீன் வழங்கக்கோரி துணை மனுவும் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஆர்.பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர்கள் சார்பில், “வின்சென்ட் விசாரணையின்போது மனுதாரர்கள் காவல் நிலையத்தில் இல்லை. மனுதாரர்கள் தவறாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையை நிறுத்திவைத்து, ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், “வின்சென்ட் உயிரிழப்பு காவல் மரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே தண்டனை வழங்கியுள்ளது. சம்பவத்தின்போது மனுதாரர்கள் காவல் நிலையத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டியதில்லை” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “வின்சென்ட் உடலில் 38 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வின்சென்ட்டுடன் விசாரணைக்கு அழைத்த இருவரை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
வின்சென்ட்டை மட்டும் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பியுள்ளனர். வின்சென்ட் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய நேரத்துக்கும், மருத்துவமனையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நேரத்துக்கும் இடையிலான நேரம் மிகவும் முக்கியமானது.
வழக்கு விசாரணை 25 ஆண்டுகளாக நடைபெற்றதற்கு அரசு தரப்பை காரணமாக கூற முடியாது. விசாரணை தாமதத்துக்கு மனு தாரர்கள்தான் காரணம். விசாரணை நீதிமன்றம் முழுமையாக விசாரணை நடத்தியே மனுதாரர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. எனவே, மனுதாரர்களின் தண்டனையை நிறுத்திவைத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்க எந்த காரணமும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.