கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆணையர் சித்ரா, சமுதாயக்கூடத்தை அதிரடியாக மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் செயல்படுகின்றன. இந்த சமுதாயக் கூடங்களின் நிர்வாகப் பொறுப்பையும், பராமரிப்பையும் அந்தந்த பகுதி உதவிப் பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர். சமீபகாலமாக சில வார்டுகளில் இது போன்ற சில சமுதாயக்கூடங்கள், மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமலேயே பொது மக்களுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும், அதன் பின்னணியில் அப்பகுதியில் செல்வாக்கு படைத்த அரசியல் கட்சியினர் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
தற்போதைய ஆணையர் சித்ரா, இதுபோன்ற சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சியினரின் பிடியில் இருந்து மீட்டு, மீண்டும் மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கொண்டிருக்கிறார். இதற்காக ஆணையர் ஆய்வு மேற்கொண்டபோது, மண்டலம்-3-ல் உள்ள 54-வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் ஒன்று, கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திலேயே இல்லாமல் இருந்ததும், அதன் வருவாய் மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
அதனடிப்படையில் தெற்கு வெளி வீதி அருகே குப்புபிள்ளை தோப்பு 2-வது தெருவில் உள்ள அந்த மாநகராட்சி சமுதாயக்கூடத்தை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் ஒருவர் அந்த சமுதாயக்கூடத்தின் மின் இணைப்பையே தனி நபர் பெயருக்கு மாற்றி, தனியார் மண்டபம் போல் அவரே நிர்வாகம் செய்து வந்ததும் தெரியவந்தது. ஆணையர் சித்ரா, உடனடியாக அந்த சமுதாயக் கூடத்தை மீட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ஆணையரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சமுதாயக்கூடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த முன்னாள் கவுன்சிலர் வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அங்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். கடந்த காலத்தில் அதிகாரிகள் கண்காணிக்காமலேயே விட்டுவிட்டதால், இந்த சமுதாயக் கூடத்துக்கு தனியார் மண்டபம் போல் வண்ணங்கள் பூசி பராமரித்து வந்துள்ளனர்.
அதனால், இந்த மண்டபம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதை மக்களும், அதிகாரிகளும் மறந்து விட்டனர். தற்போது சொத்துவரி தொடர்பாக ஆணையர் அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்தபோது தனி நபர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சமுதாயக் கூடம் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்றார்.