சென்னை: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (வியாழக்கிழமை) ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்.” என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து கொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
இதய சிகிச்சை மருத்வர் G.செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.