பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாவேரியை சேர்ந்த காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பசவா நகரைச் சேர்ந்தவர் ஷங்கர்கௌடா ஹடிமணி (51). காய்கறிக் கடையை நடத்திவரும் இவருக்கு, அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ டிஜிட்டல் முறையில் ரூ.1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு நீங்கள் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷங்கர்கௌடா ஹடிமணி கூறுகையில், “நான் விவசாயிகளிடம் இருந்து காய்களை வாங்கி, சிறிய அளவில் கடை நடத்தி வருகிறேன். எனது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தினர். எனது வருமானத்துக்கு ஆண்டுதோறும் உரிய வருமான வரியை செலுத்தியுள்ளேன்.
நான் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத போதும், அதிகாரிகள் எனக்கு ரூ.29 லட்சம் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சிறு வியாபாரியான என்னால் இவ்வளவு பெரிய தொகையை எப்படிச் செலுத்த முடியும்? நாட்டில் காய்கறிக்கு ஜிஎஸ்டி கிடையாது. சிறு விவசாயிகள், சில்லறை விற்பனையாளர்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இந்த நோட்டீஸ் வந்த பின்னர் நான் யுபிஐ மூலம் பணம் பெறுவதை நிறுத்தி விட்டேன்.” என தெரிவித்தார்.
ஷங்கர்கௌடா ஹடிமணியை போல கர்நாடகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் யுபிஐ பண பரிவர்த்தனையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். மேலும் ஜிஎஸ்டி நோட்டீஸை கண்டித்து நேற்று மாநில அளவில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.