புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார்.
அதேநேரம் இந்த நடவடிக்கை தொடர்வதாகவும் கூறுகிறார். இது ஒருபுறம் இருக்க, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரை நான்தான் தடுத்து நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதுவரை 25 முறை கூறியுள்ளார்.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருக்கிறார். இதுபற்றி ஒரு வாரத்தை கூட அவர் கருத்து தெரிவிக்கவில்லை. நாங்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள் என கூறியவர்கள் இப்போது ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.
ட்ரம்ப்தான் போரை நிறுத்தி உள்ளார். அவர் கூறுவது உண்மை. இது உலகத்துக்கே தெரியும். அப்படியிருக்க பிரதமர் மோடி எப்படி அதை மறுத்து அறிக்கை வெளியிட முடியும்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.