புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் 2 நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜினாமா செய்தார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 68-ன் படி, புதிய குடியரசு துணைத் தலைவரை அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும். இதன்படி, செப்டம்பர் 2025-க்குள் இதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மத்தியில் ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பாஜக, அடுத்த 10 ஆண்டுகளில் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு, முக்கிய அரசியலமைப்பு பதவிகளுக்கான நியமனங்களை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மொத்தம் உள்ள 782 உறுப்பினர்களில், 394 பேரின் ஆதரவு தேவை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) மக்களவையில் 293 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 129 எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளனர். என்டிஏ.வுக்கு பெரும்பான்மை உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் 150 எம்.பி.க்களே உள்ளனர். அதனால், எதிர்க்கட்சிகள் போட்டி வேட்பாளரை அறிவித்தாலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஹரிவன்ஷ் நாராயண் சிங் முதலிடத்தில் உள்ளார். மாநிலங்களவை துணைத் தலைவராக இருக்கும் இவர் ஜேடியுவை சேர்ந்தவர். மாநிலங்களவையை நடத்துவதில் அனுபவம் உள்ளவர். பிஹார்வாசிகளில் ராம்நாத் தாக்குரின் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது, பிஹார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூரின் மகன்தான் ராம்நாத்.
கற்பூரி தாக்குருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா சமீபத்தில் வழங்கப்பட்டது. முதல்வர் நிதிஷ் குமாரின் பெயர் இந்த பதவிக்கு அடிபட்டாலும் அவரது உடல்நிலை மற்றும் மனநிலை அதற்கு ஏற்றதாக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பெயர்களும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன. இதற்கிடையில், பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக பாராட்டி வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பெயரும் இந்த பட்டியலில் உள்ளதாக தெரிகிறது. சசி தரூரை முன்னிறுத்துவதன் மூலம் காங்கிரஸை உள்ளிருந்து உடைக்க பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.