புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் நந்தி எம்பெருமான், நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.
இந்த ஊருக்குள் நுழைந்தவுடன் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் நம் கண்ணுக்கு தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோயில் தான். இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமக்கள் பெருமுயற்சி செய்து பெரும் பணம் சேகரித்து இக்கோயிலை கட்டியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர். நந்தி எம்பெருமான். நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் ஒன்பதுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளதாம். சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோயிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். இது, சிவன் கோயிலாக இருந்த போதிலும் ‘நந்திகோயில்’ என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றது.
ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோயில். உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லையாம். ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் இவர்.
இவரைப் பற்றி கேள்விப்பட்டு இவரைப் பார்க்க வந்தவர்கள் இன்றும் நல்ல நிலையில் வாழ்கின்றார்கள். கவியரசர் கண்ணதாசன் இவரை போற்றிப் பாடியுள்ளார். பிரம்மாண்ட நெய் உருவம், தனக்கு பிரியமான நெய்யினையே காணிக்கைப் பொருளாக வைத்திருப்பது சிறப்பு அம்சம் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
வேந்தன்பட்டியிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றார்கள். இன்றும் இப்பழக்கம் இவ்வூர் மக்களிடம் இருந்து வருகின்றது.
நந்தி எம்பெருமானுக்கு ‘தன-ப்ரியன்’ என்ற ஒரு பெயர் உண்டு. அதனால்தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும் பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப் பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்ற ஒரு விழாவினை இவ்வூர் மக்கள் நடத்தி வருகின்றார்கள். நந்தி விழா தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர்.
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே ‘சக்கரம்’ ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்ததாம். நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கை பொருள். எனவே நெய் நந்தீஸ்வரரை பார்க்க வருகிறவர்கள் வரும்போது கலப்படமில்லாத சுத்தமான பசு நெய் கொண்டு வரவேண்டும்.
நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துதல் எனும் ஒரு வேண்டுதலை நெய் நந்தீஸ்வரருக்கு இவ்வூர் மக்கள் நடத்தி வருகிறார்கள். இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, உடலில் நோய்கள் தோன்றினாலோ நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
நோய்களோ, பிரச்சனைகளோ தீர்ந்த பிறகு வெங்கல மணி ஒன்றும், பட்டுத் துண்டு ஒன்றும், மாலை ஒன்றும் வாங்கி நெய் நந்தீஸ்வரருக்கு சார்த்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
பிரதோஷ விழா: நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது.
மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய் கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.
நெய் நந்தீஸ்வரரின் பார்ப்பதற்கு படையெடுத்து வருவோர் ஏராளம். பக்தி மணம் கமழ வருவோரெல்லாம் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரரை தரிசிப்பதோடு சிவ குடும்பத்துப் பிள்ளையான நந்திகேஸ்வரரையும் நெய் மணம் கமழ தரிசித்து மகிழ்கின்றார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய சந்தோஷத்தை நன்றியாகச் சொல்ல திரும்பத் திரும்பவும் வருகின்றார்கள்.
செல்வது எப்படி? – சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு சிட்டி பஸ்களும், தனியார் பஸ்களும் நிறைய உள்ளன. கோயில் திறப்பு: காலை 6.00 மணி முதல் பகல் 12 மணிவரை | மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
– செந்தில் நாகப்பன், வேந்தன்பட்டி