புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு பெட்டியில் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள், பெண்களுடன் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண்ணிடம் அதுபற்றி விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயிலில் பயணம் செய்தவர்கள் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹர் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால், அவர்களை பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லாமல் பாட்னா செல்லும் ரயிலில் அழைத்துச் செல்ல முயன்றனர். வேலையில் அமர்த்துவதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை. இதனால் அந்த 56 பெண்களையும் மீட்டுள்ளோம். இவர்களை அழைத்துச் செல்ல முயன்ற 2 பேரை கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.