புதுடெல்லி: பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சி இந்துத்துவாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வரும் 2027 உ.பி. தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் தற்போதைய ஷ்ராவண மாதத்தில் சமாஜ்வாதி சார்பில் காவடி யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக கேதார்நாத்தில் இருப்பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்பதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்ளார். இந்த கோயில், அகிலேஷின் சொந்த ஊரான எட்டாவாவின் சபாரி பூங்கா அருகே 2021 முதல்கட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கை மூலமாக சமாஜ்வாதி இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முயல்வதாக கருதப்படுகிறது.
எட்டவா கோயிலுக்காக அகிலேஷ் தனது தலைமையிலேயே ஓர் அறக்கட்டளை அமைத்துள்ளார். இக்கோயிலுக்கு உ.பி., உத்தராகண்ட் ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சார் தாம் தீர்த்த புரோஹித் மகா பஞ்சாயத்து, அகில பாரதிய அகாடா பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் இந்த எதிர்ப்பு பட்டியலில் உள்ளன.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக புனித மத சின்னங்களை அகிலேஷ் அரசியலாக்க முயற்சிப்பதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. கோயில் கட்டுமானத்தை அகிலேஷ் நிறுத்தாவிட்டால் அல்லது மாற்றி அமைக்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறும்போது, “கோயில் கட்டுமானம் மற்றும் கன்வார் யாத்திரைக்கு சாதி, மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை. கன்வார் யாத்திரை என்பது ஒரு பண்டைய பாரம்பரியம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.
ஒவ்வொரு சமூகத்துக்குமான இதனை பாஜகதான் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது’’ என்றார். இதற்கு முன், டெல்லி புராரியில் கேதார்நாத் கோயில் மாதிரி வடிவத்தில் ஒரு கோயில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. உத்தராகண்ட் துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் எதிர்ப்பால் இதற்கான முயற்சி கைவிடப்பட்டது.