இந்தி நடிகையான கல்கி கோச்சலின் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’, ‘நேசிப்பாயா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப்பை காதலித்துக் கடந்த 2011-ம் ஆண்டு ஊட்டியில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் தனது விவாகரத்து குறித்துப் பேசியுள்ள கல்கி கோச்சலின், “இருவரும் ஒருவருக்கொருவர் விலகி இருக்க வேண்டும் என்று உணர்ந்த ஒரு கட்டம் வந்ததால் பிரிந்தோம். பிரிந்த ஆரம்ப நாட்களில் அவரை வேறொரு பெண்ணுடன் பார்ப்பது கடினமாகவே இருந்தது. இப்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம், அவ்வப்போது எங்களால் சந்தித்துப் பேச முடிகிறது. இந்த மனநிலையைப் பெறுவதற்கு எங்களுக்கு சில காலம் எடுத்துக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.
கல்கி கோச்சலின், இஸ்ரேலிய இசைக் கலைஞர் கை ஹெர்ஷ்பெர்க்கை 2020-ல் மணந்தார். இவர்களுக்குத் திருமணத்துக்கு முன்பே, மகள் பிறந்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “திருமணத்துக்கு முன்பே தாய்மை அடைந்தது பற்றி பெரிய விஷயமாகப் பேசினார்கள். பின்னர் திருமணம் செய்து கொண்டோம்” என்றார்.