புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி 12 பேரையும் விடுதலை செய்யுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மகாராஷ்டிர அரசின் மேல்முறையீட்டை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்த மனு மீது வரும் 25-ம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.