கும்பகோணம்: ‘சிறுபான்மையின மக்களை ஏமாற்றுவது திமுகதான்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பழனிசாமி வந்து பார்க்கட்டும் என்று அண்மையில் பேசி இருந்தார்.
அவர் சொன்ன அனைத்து இடங்களுக்கும் நான் செல்லும்போது மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷூட் மட்டும் எடுத்து, 50 மாத காலத்தை கடத்தி விட்டார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விண்ணை முட்டி விட்டது. கடந்த தேர்தலின்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசுகாலி பணியிடங்கள் 3 லட்சம் நிரப்பப்படும் என்றார்கள்.
ஆனால், இதுவரை 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதலில் அறிவித்த ‘முதல்வரின் முகவரி திட்டம்’ காணாமல் போய் விட்டது. பின்னர், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயர் வைத்தார்கள். தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டி லேட்டர் வைத்துள்ளார்கள். 2026-ல் ஓட்டு என்றவென்டிலேட்டரை எடுத்தால் ஆட்சி போய்விடும். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து பேட்டி கொடுக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித் துள்ளது வெட்கக்கேடானது.
சிறுபான்மை வாக்குகள் தங்களுக்குத்தான் கிடைக்கும் என திமுகவினர் பேசுகிறார்கள். ஆனால், சிறுபான்மை மக்களை ஏமாற்றுவது திமுகதான். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. எங்களைப் பொறுத்த வரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெற அமைப்பது கூட்டணி, அதிமுக எப்போதும் கொள்கை களை விட்டுக் கொடுக்காது. இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவையாறில் பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.