சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 8 உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இதில் 2,053 வகையான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறலாம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,500 கோடிக்கான சிகிச்சைகள் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும், பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சேவை மறுக்கப்படுகிறது.
குறிப்பாக உயிர் காக்கும் பல அறுவை சிகிச்சைகளை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகள் முன்வருவதில்லை. இதனால், காப்பீட்டு திட்ட அட்டை வைத்திருந்தும், அது முழுமையாக பலனளிக்காத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகளை அறிந்துகொள்ளும் வகையில், அந்த விவரங்களை செல்போன் செயலி மூலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மருத்துவர் எஸ்.வினீத் கூறியதாவது: முதல்வர் காப்பீட்டுத் திட்ட செபோன் கைப்பேசி செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. விரைவில் அந்த செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தகுதியான யாரும், அதன் மூலமாக விண்ணப்பித்து காப்பீட்டு அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம்.
அதன் பின்னர், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில், எந்த மருத்துவமனைகளில் எல்லாம் முதல்வர் காப்பீட்டின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
சிகிச்சை விவரங்கள் குறித்தும் தகவல் பெறலாம். பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை விவரங்களையும் செல்போனில் அறிந்து கொள்ள முடியும். முதல்வர் காப்பீட்டுத் திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.