சென்னை: சென்னையில் ஆக.12-ம் தேதி நடக்கவுள்ள கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கியூபா மீது நடத்தி வரும் தாக்குதல், பொருளாதார தடை ஆகியவற்றை கண்டித்தும், கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்தும் கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கியூபா புரட்சி தினமான ஜூலை 26-ம் தேதி, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆதரவு இயக்கங்கள் நடத்தப்படவுள்ளன. அதன் தொடர்ச்சியாக கியூபா ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமை புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் ஆக.12-ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினரும், கியூபா ஒருமைப்பாட்டுக்குழு செயலாளருமான ஐ.ஆறுமுக நயினார் ஆகியோர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.
அப்போது பிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர். இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.