மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தவறு நடந்தது தெரிந்தவுடன் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்களின் பதவிகளை முதல்வர் பறித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மாநகராட்சி அலுவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும், அதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடியோ, விளக்கமோ அமைச்சர்கள், திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் தரப்பில் அளிக்கப்படாதது திமுகவினரி டையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில், வரியைக் குறைத்து நிர்ணயம் செய்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அதன் சொத்து வரி மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட வீடுகளுக்கான வரியை செலுத்தி வந்த 200 திருமண மண்டபங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு முறையாக வரி விதிக்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்த முறைகேடு விவகாரத்தில் 5 திமுக மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலி ன் பறித்துள்ளார். ஆணையர் சித்ரா, 19 பேரை தற்காலிக பணி நீக்கம் மற்றும் நிரந்தர பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 10 பேரை கைது செய்துள்ளனர். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதும், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன், சொத்துவரி முறைகேடு பின்னணியில் மிகப்பெரிய வலைப்பின்னல் இருப்பதாகவும், மாநகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் மோசடி வழியில் மடை மாற்றப்படுகிறது, ’’ என்றும் குற்றம் சாட்டினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து, மேயரை விசாரிக்க வேண்டும் என்றும், மண்டலத்தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர். மாநகராட்சி ஆணையரிடமும் சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க புகார் மனு வழங்கினர். வரும் 29-ம் தேதி நடக்கும் மாநகராட்சிக் கூட்டத்தில் சொத்து வரி முறைகேட்டை பற்றி கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், சொத்து வரி விவகாரத்தில் ‘உன் ஆட்சியில் நடந்ததை நான் கேட்க மாட்டேன்; எனது ஆட்சியில் நடப்பதை நீ கேட்காதே’ என, அதிகாரிகள், அரசியல்வாதிகள் முறைகேடுட்டில் ஈடுபட்டுள்ள தாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினரையும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
மாநகராட்சி முறைகேட்டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏன் இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை என்றும், சிலரின் குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காக மக்கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்படுகிறது, முதல்வர் தலையிட வேண்டும் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் முதல்வர் , தமிழக அரசு எடுக்கும் தொடர் நடவடிக்கை,பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றாலும், உள்ளூர் திமுகவின் 2 அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ-க்களும், மாநகராட்சி மேயரும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமுமோ, பதிலோ கூறாமல் அரசியல் செய்கின்றனர்.
அதனால், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் சொத்து வரி முறைகேடு, தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை மாநகராட்சி பின் தங்கியது போன்றவை திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.