மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் முக்கிய சாட்சிகள் 4 பேருக்கு பாதுகாப்பும் வழங்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அஜித்குமாரின் குடும்பத்திற்கு 7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. மேலும், சிபிஐ தரப்பில், விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்திஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவர் 7 வேலை நாட்களுக்குள்ளாக விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், சட்டவிரோத காவல் மரணத்தால் உயிரிழப்பவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடாகவும், அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகியவற்றையும் வழங்கி உள்ளது.
கூடுதலாக ரூ.25 லட்சம் பாதிக்கப்பட்ட அஜித்தின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மேலும், கூடுதல் இழப்பீடு தேவைப் பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.