காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் போட்டி ஒன்றில் அப்பா முகமது நபி வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி அசத்தியுள்ளார் மகன் ஹசன் இஸக்கில். இந்த வீடியோ கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார் 40 வயதான ஆல்ரவுண்டர் முகமது நபி. கடந்த 2009 முதல் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். இது தவிர உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் Shpageeza கிரிக்கெட் லீக் தொடரில் எம்ஐஎஸ் அய்னாக் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அவரது மகன் ஆமோ அணிக்காக இதே தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று இந்த அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன.
அப்போது தன் அப்பா நபி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் விளாசி இருந்தார் மகன் ஹசன் இஸக்கில். இந்தப் போட்டியில் 52 ரன்களை அவர் எடுத்திருந்தார். இருப்பினும் 160+ ரன்கள் இலக்கை 18 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எட்டி ஆட்டத்தில் வெற்றி பெற்றது எம்ஐஎஸ் அய்னாக் அணி.