பாபநாசம்: “எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. அதிமுக எப்போதும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசியது: “இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு என்னை வந்து பாருங்கள் என்று அண்மையில் பேசியிருந்தார். அவர் சொன்ன அனைத்து இடங்களுக்கும் நான் செல்லும் போது மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
முதல்வர் ஸ்டாலின் போட்டோஷூட் மட்டும் எடுத்து, 50 மாத காலத்தை கடத்தி விட்டார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விண்ணை முட்டி விட்டது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை சீல் வைத்து முறையாக எடுத்துச் செல்லாமல், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே, குரூப் 4 தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும். அதையும் மீறி தேர்வு முடிவுகளை அறிவித்தால், அடுத்து அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அந்த முடிவுகள் ரத்து செய்யப்படும்.
கடந்த தேர்தலின்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு காலிப் பணியிடங்கள் 3.50 லட்சம், அரசு சார்ந்த காலிப் பணியிடங்கள் 2 லட்சம் என 5.30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்கள். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வெறும் 50 ஆயிரம் பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.
முதலில் அறிவித்த முதல்வரின் முகவரி திட்டம் காணாமல் போய்விட்டது. அதன்பின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயர் வைத்தார்கள். தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். திமுக ஆட்சி போக வேண்டிய நேரத்தில், ஆட்சிக்கு வென்டி லேட்டர் வைத்துள்ளார்கள். 2026-ல் ஓட்டு என்ற வென்டிலேட்டரை எடுத்தால் ஆட்சி போய்விடும்.
மக்களை பற்றி இந்தனை நாளாக கவலைப்படாமல் கும்பகர்ணன் போல தூக்கத்தில் இருந்து முதல்வர், இப்போது விழித்துக் கொண்டு இருக்கிறார். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து பேட்டி கொடுக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர். இது வெட்கக்கேடானது.
சிறுபான்மை வாக்குகள் தங்களுக்குத் தான் கிடைக்கும் என திமுகவினர் பேசுகிறார்கள். ஆனால், சிறுபான்மை மக்களை ஏமாற்றுவது திமுக தான். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெற அமைப்பது கூட்டணி. அதிமுக எப்போதும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதன்பின் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “மக்களை ஏமாற்றி நாங்கள் வாக்கு கேட்கவில்லை. அதிமுகவை உடைக்க, முடக்க மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்தார். அத்தனை அவதாரத்தையும் இங்குள்ள அதிமுக கட்சியினரால் தூள் தூளாக நொறுக்கப்பட்டது. நான் ஒரு விவசாயி, இந்த நாட்டை விவசாயி ஆளக்கூடாதா? முதல்வர் பதவி என்ன திமுகவின் குடும்ப சொத்தா? தமிழ்நாடு என்ன திமுகவுக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதா? அதிமுக குடும்ப கட்சி கிடையாது.
இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நிலையில், திமுக மீண்டும் மன்னராட்சியை கொண்டுவர துடிக்கிறது. குடும்ப ஆட்சியும், வாரிசு அரசியலும் தமிழ்நாட்டுக்கு தேவையா? அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் 2026-ம் ஆண்டு தேர்தல்தான். இந்த தேர்தலோடு கருணாநிதி குடும்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளும். நாங்களும், பாஜகவும் திமுகவை எதிர்ப்பதால் கூட்டணியை வைத்துள்ளோம். விசிக கட்சியை இன்னும் கொஞ்சம் நாளில் திமுக விழுங்கிவிடும். திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் ஜால்ரா போடுகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசவில்லை. திமுகவுக்கு எட்டு மாதம்தான் ஆயுட்காலம்.
‘நீதிமன்றத்தை நாடி தடை வாங்க முயன்ற அதிமுகவுக்கு, நீதிமன்றம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது’ என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். நாங்கள் செல்போன் ஓடிபி வாங்கக் கூடாது என்றுதான் கூறினோம். ஆர்.எஸ்.பாரதிக்கு வயதாகி விட்டதால் ஏதோ ஏதோ பேசுகிறார்.
திமுகவில் உறுப்பினர்கள் குறைந்து விட்டார்கள். மக்கள் செல்வாக்கை இழந்து விட்டனர். எந்தக் கட்சியாவது வீடுகளுக்கு சென்று கதவை தட்டி உறுப்பினராக சேர்ந்துள்ளார்களா? ஸ்டாலின், உதயநிதி வந்த பின்னர் திமுகவில் உறுப்பினர்கள் குறைந்துவிட்டனர். அதனால் தான் வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பது போல் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். திமுக கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது போல் போய்விட்டது” என்றார் பழனிசாமி.