மதுரை: திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்ட்) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார், தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க தடை விதித்தும், இதுவரை பெறப்பட்ட தனிப்பட்ட விவரங்களை அழிக்கவும், சட்டவிரோதமாக ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த தடையை விலக்கக் கோரி, மானாமதுரை பேரவைத் தொகுதி ஓரணியில் தமிழ்நாடு பொறுப்பாளர் வினோத், உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் விவரம்: திமுக நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர்களின் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. 6.1.2025-ல் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அது பொது ஆவணம். அதில் உள்ள வாக்காளர்களின் விவரங்களின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. போலி வாக்காளர் சேர்ப்பை தவிர்க்கவும், வாக்காளர்களின் செல்போன் எண்ணை உறுதிப்படுத்தவும் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. இந்த ஓடிபியும் திமுக தளத்துக்குள் நுழைவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். திமுக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் வசிக்கும் அதிகரையில் திமுகவினர் இன்னும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவில்லை. மனுவுடன் அவர் இணைத்துள்ள புகைப்படம் அதிகரையில் எடுக்கப்பட்டது இல்லை. ஆதார் கார்டு கேட்பதாக மனுவில் திமுக மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.07.2025-ல் தொடங்கப்பட்டது. இதற்கு தனி செயலி பயன்படுத்தப்படுகிறது. அதில் வாக்காளர்கள் அவர்களாக அளிக்கும் தகவல்களை தவிர வேறு எந்த விவரங்களும் பெறப்படுவதில்லை. எந்த வற்புறுத்தலும் இல்லாமல் வாக்காளர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. யாரிடமும் தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் கோருவதில்லை. இதை ஏற்பவர்களுக்கு மட்டுமே ஓடிபி அனுப்பப்படுகிறது.
டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மீறல் இருப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இது வழக்குக்கு தொடர்பு இல்லாதது. தேர்தல் ஆணையத்தின் தரவு அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓடிபி எண் பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜூலை 23) விசாரணைக்கு வருகிறது.