சென்னை: நாடுமுழுவதும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதற்கு அங்கீகாரம் அளித்தல், அதை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சிகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல், மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை தேசிய மருத்துவ ஆணைய குழு சமீபத்தில் மேற்கொண்டது. அதில், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மருத்துவ கல்லூரிகளின் டீன்கள் தனித்தனியே விளக்க கடிதங்களை அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், 25 மருத்துவ கல்லூரிகளுக்கு நிபந்தனை அனுமதி அளிக்கப்பட்டது.
அதேநேரம், 11 மருத்துவ கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையிலான பேராசிரியர்கள் இல்லாததால், தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரிடம் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அவர்கள் இருவரும் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பித்து விளக்கமளித்தனர்.
இதையடுத்து அந்த கல்லூரிகளுக்கும் நிபந்தனை அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் அளித்தது. ஆனால், 4 மாதங்கள் மட்டுமேஅந்த குறைபாடுகளை களைவதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் எனவும், அப்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதை கருத்தில்கொண்டு, சுற்றறிக்கை மூலமாக சில முக்கிய அறிவுறுத்தல்களை மருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் வழங்கியுள்ளார்.