புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச்சார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்ஆர்பிஎல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
வீடியோகான் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனுமதி அளித்ததற்காக சந்தா கோச்சாருக்கு அவரது கணவர் மூலம் லஞ்ச பணத்தை வீடியோகான் குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 50-ன் கீழ் நம்பக்கூடிய வகையில் கிடைத்துள்ளது.
இதன் மூலம் சந்தா கோச்சாருக்கு தொடர்புடைய ரூ.74 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்கிறது. ஐசிஐசிஐ வங்கி, கடன் வழங்கிய மறுநாளே வீடியோகான் குழுமத்தின் எஸ்இபிஎல் நிறுவனம் மூலம் ரூ.64 கோடியை தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு மாற்றியுள்ளது.
வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்க தனிப்பட்ட முறையில் ஆதரவாக செயல்பட்ட சந்தா கோச்சார் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படுகிறது. இவ்வறு தீர்ப்பாயம் உத்தரவில் தெரிவித்துள்ளது.