புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நகரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் 206 வீரர்கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுவார்கள். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம்
ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரரே, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெறுவார். கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார்.
செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்களுக்கு பிறகு இந்தியா நடத்த உள்ளது. கடைசியாக 2002-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொடரில் வீரர்கள் நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள். இதனால் ஒவ்வொரு சுற்றிலும் தோல்வியடையும் வீரர் வெளியேற்றப்படுவார்.
ஃபிடே வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகக் கோப்பை தொடரில் 2021 முதல், நாக் அவுட் முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் நீடிக்கும். முதல் இரண்டு நாட்களில் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து தேவைப்பட்டால் மூன்றாவது நாளில் டை-பிரேக்கர் நடைபெறும். 2025-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியாளரைத் தீர்மானிக்கும் 2026-ம் ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 206 வீரர்களில் முதல் 50 இடங்களில் உள்ள வீரர்களுக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்படும். இதனால் இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்பார்கள். 51 முதல் 206-வது இடங்களில் உள்ள வீரர்கள் முதல் சுற்றில் விளையாடுவார்கள்.
உலக சாம்பியன் டி.குகேஷ், 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியனும் உலகின் முதல் நிலை வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட், 2024-ம் ஆண்டில் டாடா ஸ்டீல் செஸ், உலக ஜூனியர் யு-20 சாம்பியன்ஷிப், மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபிடே மகளிர் கிராண்ட் பிரிக்ஸின் 5-வது கட்ட போட்டி ஆகியவற்றை இந்தியா நடத்தி உள்ளது. இந்த வரிசையில் தற்போது உலக கோப்பை தொடரையும் நடத்த உள்ளது.