தமிழில், மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, வேலாயுதம், வாலு உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. அவர் நடித்துள்ள காந்தாரி விரைவில் வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அதே கட்டிடத்தில் வேறொரு வீட்டில் தனியாக வசித்தனர். இருந்தும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹன்சிகாவும் அவர் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அதை மறுத்துள்ள சோஹைல் கட்டாரியா,‘அந்தச் செய்தியில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார். சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது.