மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி நேற்று முன்தினம் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த போது காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர், எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடது முழங்கால் காயம் காரணமாக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில்இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகிஉள்ளார். அவர், உடனடியாகதாயகம் திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.