சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கிட்னி விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சட்ட விரோத கிட்னி விற்பனையை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.
ஆனால், இதனைக் கண்காணிக்க திமுக அரசு தவறிவிட்டது. எனவே, முதல்வர் ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, சட்ட விரோத கிட்னி விற்பனையை தடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “அரசு கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள், தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நிரந்தரம் செய்யப்படாத பகுதி நேர ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு மடிக் கணினி வழங்காமை என பல குளறுபடிகள் அடங்கிய துறையாக கல்வித் துறை விளங்குகிறது. கல்வியில் சிறந்து விளங்கிய தமிழகத்தை சீரழிக்கும் திமுக அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.