மும்பை: இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை உறுதி செய்வது போல் கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொலஸ்ட்ரால், செரிமான குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகள் விற்பனையை விட, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் மருந்துகள் விற்பனை குறித்த ஆய்வை ‘பார்மாரேக்’ நிறுவனம் நடத்தியுள்ளது. நாட்டின் பிரபலமான 17 பார்மா நிறுவனங்கள் விற்பனை செய்த மருந்துகள் குறித்த புள்ளிவிவரத்தை ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரூ.1,761 கோடிக்கு பார்மா நிறுவனங்கள் விற்றுள்ளன. அதன்பின் கடந்த 2025-ம் ஆண்டில் ரூ.2,645 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகி உள்ளன. இந்த புள்ளிவிவரத்தின்படி இதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கான மருந்துகள் ஆண்டுதோறும் சராசரியாக 10.7 சதவீதம் அதிகரித்து வந்துள்ளன.
இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘‘மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது, உயர் ரத்த அழுத்தத்தை அளவிடுவதில் புதிய அளவுகோல்கள் போன்றவற்றால் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதய நோய் அதிகரித்து வருவது உண்மைதான். அதேநேரத்தில் இதய நோயை கண்டறியும் அதிநவீன கருவிகள் வருகை, இதய நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவை மேம்பட்டுள்ளன’’ என்கின்றனர்.
மத்திய அரசின் புள்ளிவிவரத்தில், நாட்டில் ஏற்படும் 63 சதவீத உயிரிழப்புகள் எளிதில் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. அதில் 27 சதவீதம் பேர் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.