சென்னை: நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேருக்கு எதிராக, நகராட்சி தலைவர் அளித்த புகாரை பரிசீலித்து, ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள், கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும், ஒரு பெண் கவுன்சிலர் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றதாக குற்றம் சாட்டி, 12 கவுன்சிலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, நகராட்சி தலைவர் சிவகாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், உள்ளூர் பிரச்சினைகளை கண்டறிந்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு கவுன்சிலரின் கடமை. இந்த கடமையை புறக்கணித்த இவர்களுக்கு எதிராக நடவடிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.மாலா, மனுதாரர் அளித்த புகாரை பரிசீலித்து, ஆறு வாரங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், 12 கவுன்சிலர்களும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கிய பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.