புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வெற்றியை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து கொண்டாட உள்ளனர். அதேபோல, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல்முறையாக இந்திய தேசிய கொடியை ஷூபான்ஷு ஏற்றிய சாதனையும் கொண்டாடப்பட உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
நம் நாட்டின் வெற்றிகளை கொண்டாடும் விதமாக தற்போதைய மழைக்கால கூட்டத் தொடர் அமைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல்முறையாக இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். விண்வெளியில் நமது மூவர்ண கொடியை ஏற்றிய ஷீபான்ஷு சுக்லாவுக்கு பாராட்டுகள். இந்த சாதனையை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் ஒன்றிணைந்து கொண்டாட உள்ளனர். அனைத்து கட்சியினரின் வாழ்த்துகளும், இஸ்ரோவின் விண்வெளி பயண திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் ராணுவ வலிமையை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்தது. இந்த ராணுவ நடவடிக்கையில் முப்படைகளும் 100 சதவீத வெற்றி அடைந்தன. துல்லிய தாக்குதல் மூலம் 22 நிமிடங்களுக்குள் எதிரியின் (பாகிஸ்தான்) தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. இந்த வெற்றி உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இப்போது நான் உலக தலைவர்களை சந்திக்கும்போது, இந்தியாவின் அதிநவீன ஆயுதங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்கின்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி கொண்டாடப்படும்.
நாடாளுமன்றத்தின் வாழ்த்தும், பாராட்டும் நமது முப்படைகளை யும் வலுப்படுத்தும், ஊக்கப்படுத்தும். பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஆயுத உற்பத்திக்கும் இது ஊக்கம் அளிக்கும். வரும் காலத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் ஆயுத உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
நாடு முழுவதும் நக்சல் தீவிரவாதம், மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு வருகிறது. நமது பாதுகாப்பு படை வீரர்கள். தீவிரவாதத்துக்கு எதிராக தீரமாக போரிட்டு வருகின்றனர். ஒருகாலத்தில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன. ஒரு காலத்தில் சிவப்பு வழித்தடம் என்று முத்திரை குத்தப்பட்ட பகுதிகள் இப்போது வளர்ச்சியின் மண்டலங்களாக மாறி வருகின்றன. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. இப்போது 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். சுமார் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த சாதனையை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இப்போது பணவீக்கம் ஒற்றை இலக்கத்தில் கணிசமாக குறைந்து வருகிறது.
டிஜிட்டல் இந்தியா, யுபிஐ மூலம் இந்தியாவின் திறனை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா வழிகாட்டியாக விளங்குகிறது. நாடு முழுவதும் 90 கோடிக்கும் அதிகமான மக்கள், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இது ஒரு மகத்தான சாதனை. கண்களை பாதிக்கும் ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது சுகாதார துறையில் மாபெரும் சாதனை.
நாடு முழுவதும் இயல்பான மழை பெய்யும் என்று வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த ஆண்டு பருவமழை, விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பஹல்காமில் நடந்த கொடூரமான கொலைகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது தேச நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டன. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் அனைத்து கட்சி எம்.பி.க்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். நம் நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. நாம் கொள்கை ரீதியாக வேறு பட்டிருக்கலாம். ஆனால், தேசத்தின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம். இந்த உணர்வு, நாட்டின் வளர்ச்சி பயணத்தை வலுப்படுத்தும்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான விவாதங்களை எம்.பி.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு முக்கியமான மசோதாக்கள் தற்போதைய கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இரு அவைகளிலும் அந்த மசோதாக்கள் நிறைவேறும் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.