தூத்துக்குடி: சர்வதேச தரத்தில் ரூ.381 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ம் தேதி திறந்து வைக்கிறார்.
தென்தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து வசதி அமைகிறது. விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்கு வரத்து, சாலை போக்குவரத்து என அனைத்து விதமான போக்குவரத்து வசதியையும் தூத்துக்குடி பெற்றுள்ளது. தூத்துக்குடியை அடுத்த வாகை குளத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 1992-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் சிறிய வகை விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. ஆனால், இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. குறித்த நேரத்துக்கு விமானங்கள் வராததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 1996-ம் ஆண்டு என்.இ.பி.சி என்னும் தனியார் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து விமான சேவையை தொடங்கியது.
இந்த நிறுவனம் தூத்துக்குடி- கொச்சி- சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல நான்கரை மணிநேரம் ஆனது. இதனால் இந்த சேவை 6 மாதத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஏர் டெக்கான் தனியார் விமான சேவை தொடங்கப்பட்டது.
தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து விமானங்களிலும் முழு அளவில் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது அவசியமாகிவிட்டது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடு தளம் 3,115 மீட்டர் நீள ஓடுதளமாக மாறப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ஏர் பஸ், போயிங் விமானங்கள் வந்து செல்லும் வகையிலும், இரவு நேர விமான சேவை நடைபெறும் வகையிலும் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி இரவு திறந்து வைக்கிறார். இதற்காக அன்று இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தொடர்ந்து விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி இரவு 9.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு செல்கிறார். இவ்விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் விமான நிலையத்தில் நடைபெற்றது. இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.