“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏராளமான இளைஞர்களை ஈர்த்து, வளர்த்தவர்” என்று கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கள் செய்தி: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) இன்று (ஜூலை 21) திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி, ஆழ்ந்த வேதனையளிக்கிறது.
தற்போதுள்ள கேரள மாநிலத்தின் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னபுராவில் 1923 அக்டோபர் 18ம் தேதி பிறந்த வி.எஸ்.அச்சுதானந்தன், சிறு வயதில் தேச விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். அவரது 18-வது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அமைப்பு பூர்வமாக செயல்படத் தொடங்கியவர்.
கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு கட்சியை வழிநடத்துவதிலும், காலனி ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட, கொடிய அடக்குமுறையை எதிர்கொண்டவர். சிறை வாழ்க்கை சித்ரவதைகளை சந்தித்தவர். எந்த நிலையிலும் கொள்கை நிலையில் தளர்வில்லாது உறுதியாக செயல்பட்டவர்.
நாட்டின் விடுதலைக்கு பிறகு, நடைபெற்ற ஜனநாயக தேர்தல் முறையில் 10 முறை போட்டியிட்டு, 7 முறை வெற்றி கண்டவர். 2006 முதல் 2011 வரை கேரள மாநில அரசின் முதல்வர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றியவர். இவரது ஆட்சி காலத்தில் கொச்சி துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்தது, மெட்ரோ ரயில் திட்டம், கொல்லம் தொழில்நுட்ப பூங்கா அமைத்தது, கண்ணூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவில் இருந்து வந்த வி.எஸ்.அச்சுதானந்தன், 1964-ஆம் ஆண்டு 32 தோழர்களுடன் வெளியேறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செலுத்தியவர். 1980 முதல் 1992 ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றியவர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். கட்சிக்கு ஏராளமான இளைஞர்களை ஈர்த்து, வளர்த்தவர்.
வகுப்புவாத, மதவெறி, சாதிய சக்திகள் அரசியல் தளத்தில் பேரபாயமாக வளர்ந்துள்ள நிலையில், பிளவுவாத சக்திகளை எதிர்த்த போராட்டம் கூர்மையடைந்து வரும் நேரத்தில், பொது வாழ்வில் அனுபவ செறிவுள்ள தலைவரை கேரள மாநில மக்கள் மட்டும் அல்ல, நாட்டின் ஒட்டு மொத்த மதச்சார்பற்ற, சமூக நல்லிணக்கம் பேணும் ஜனநாயக சக்திகள் இழந்து விட்டனர்.
வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.