Last Updated : 21 Jul, 2025 06:30 AM
Published : 21 Jul 2025 06:30 AM
Last Updated : 21 Jul 2025 06:30 AM

கோவை கிணத்துக்கடவை அடுத்துள்ள சூலக்கல், முன்பு ஒரு காலம் சிறந்த மேய்ச்சல் பகுதியாக இருந்துள்ளது. அவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன. மாலையில் அவற்றைப் பட்டியில் கொண்டு வந்து அடைக்கும் பணியை வேலைக்கார பையன்கள் செய்து வந்தனர்.
அவ்வாறு மேய்ந்து வந்த பசுக்களில் பால் குன்றுவதைக் கண்ட உழவர் பெருமக்கள் கவலை கொண்டனர். அவர்கள் மாட்டுக்காரப் பையன்களைக் கேட்டும் பயன் இல்லாததால், ஒருநாள் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பசுக்கள் ஓர் இடத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு அவற்றை விரட்டியுள்ளனர்.
அப்போது ஓடிய பசுக்களில், ஒரு பசுவின் கால்பட்டு, சுயம்பு ஒன்று உடைந்தது. உடைந்த அவ்விடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. அந்த சுயம்பு வடிவக் கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டுள்ளனர். அவ்விடத்தில் பெண் தெய்வம் ஒன்று எழுந்தருளியுள்ளதை அனைவரும் உணர்ந்தனர்.
அன்று இரவு பசுவின் சொந்தக்காரர் கனவில் அம்பிகை தோன்றி, சுயம்புவாகத் தோன்றியுள்ள தான்தான் மாரி என்றும், சுயம்புவைச் சுற்றிக் கோயில் அமைத்து வழிபடுமாறும் கட்டளை இட்டுள்ளாள்.
பசுவின் கால் பதிந்த அந்த அடையாளம் இன்னும் சுயம்புவில் நன்கு தெரிவதை அபிஷேகம் செய்யும்போது பார்க்கலாம். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால், சூலக்கல் என்று ஆயிற்று. அவ்விடத்தில் மாரி உறைவதால் சூலக்கல் மாரி என்று பெயர் பெற்றது.
ஊர்ப்பெயரும் சூலக்கல் என்றாயிற்று. அவ்வாறே சுயம்புவை மையமாக வைத்துக் கருவறையும், மகா மண்டபமும் கருங்கல்லால் அமைத்தனர். தற்போது கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
FOLLOW US
தவறவிடாதீர்!