திருப்பூர்: தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் வைகோ விவரம் தெரியாமல் பேசுகிறார். பஞ்சாலை தொழிற்சங்க சொத்துகளை எந்தக்கட்சியும் கட்டுப்படுத்த முடியாது என திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரான திருப்பூர் சு.துரைசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: வைகோவுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் திமுகவிலிருந்து வெளியே வந்தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துள்ளதாக வைகோ பேசியுள்ளார்.
பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்துக்கென்று வாங்கிய சொத்துகள் சங்கத்துக்கு மட்டுமே சொந்தமானது. தனிப்பட்ட யாரும் அதற்கு உரிமை கோர முடியாது. மதிமுகவில் பொருளாளராக இருந்த மாசிலாமணி, கணேசமூர்த்தி காசோலையில் கையெழுத்திட்டது கிடையாது.
மதிமுகவின் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது பொருளாளரின் கடமை என்று விதி இருந்தும், பொருளாளர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் பொதுச்செயலாளரான வைகோ கையெழுத்திட்டு 13 ஆண்டுகாலம் கட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்து வருகிறார்.
இதற்கு, அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சொத்துகள் அனைத்தும் சங்கத்தின் பெயரில் மட்டுமே இருக்கின்றன. அதனை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்த முடியாது. விவரம் தெரியாமல் வைகோ பேசுகிறார். வைகோவின் பேச்சைக் கேட்டு வந்த இளைஞர்களைப் படுகுழியில் தள்ளிவிட்டார். திமுகவை ஆதரிப்பது என்று வந்துவிட்ட பிறகு எதற்குத் தனிக்கட்சி, பேசாமல் திமுகவுடனே மதிமுகவைச் சேர்த்து விட வேண்டியதுதானே? இவ்வாறு அவர் தெரிவித்தார்.