சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சார்பின்மையை பாதுகாக்க முடியுமா என ஆர்எஸ்எஸ் உடன் இணைத்து விமர்சனம் செய்த ராகுல் காந்திக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருகிறது. அவர்கள் தங்களது சித்தாந்தங்களை பற்றி தான் நினைக்கின்றனர். அவர்களிடம் மக்கள் மீதான உணர்வு இல்லை.
அரசியலில் இருந்தால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணருங்கள்” என்று விமர்சித்திருந்தார். ஆர்எஸ்எஸ் உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மதவெறி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்எஸ்எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா? இவ்வாறு பதிவிட்டுள்ளார்.